கரூர்: கரூர் மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம், மூன்றாம் கட்டமாக, 24 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதல்வர் காலை உணவுத்திட்டம் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.பின், அவர் கூறியதாவது:காலை உணவுத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், 77 தொடக்க பள்ளிகளில், 1 முதல், 5ம் வகுப்பு பயிலும், 3,469 பள்ளி மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இரண்டாம் கட்டமாக, கரூர் மாவட்டம் முழுவதும் மேலும், 628 மையங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் முலம், 25,980 மாணவ, மாணவியர் என, மொத்தம், 705 மையங்களில், 29,449 தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன் பெற்று வருகின்றனர்.மூன்றாம் கட்டமாக, 24 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1,693 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், திட்டம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை உணவு தயாரித்தலுக்குரிய காய்கறிகள், எண்ணெய் மற்றும் சமையல் பொருட்களின் தரம் மற்றும் தயார் செய்யப்பட்ட உணவை மாணவ, மாணவியருக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மைக்குழு ஒவ்வொரு நாளும் தரத்தினை உறுதி செய்திடும் பொருட்டு, உணவினை ருசி பார்த்து பின்னர் வழங்க வேண்டுமெனவும், உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உணவின் தரத்தை உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.