கரூர், ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கரூர் மாவட்டத்தில், 755 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.தமிழகத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ போராடி வருகிறது. இதன்படி, ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில், 2,328 ஆசிரியர்கள், 82 அலுவலக மற்றும் பிற பணியாளர்கள் என மொத்தம், 2,410 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில், 1,554 பேர் நேற்று பணியாற்றினர். ஏற்கனவே, 110 ஆசிரியர்கள் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துள்ளனர். 746 ஆசிரியர்கள் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2,293 ஆசிரியர்கள், 134 அலுவலக மற்றும் பிற பணியாளர்கள் என மொத்தம், 2,427 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 2,298 பேர் பணிக்கு வந்தனர். 120 ஆசிரியர்கள் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துள்ளனர். 9 பேர் மட்டுமே அனுமியின்றி விடுப்பு எடுத்துள்ளனர்.மாவட்டத்தில் மொத்தமாக, 4,621 ஆசிரியர்கள், 216 அலுவலக மற்றும் பிற பணியாளர்கள் என மொத்தம், 4,837 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில், 3,852 பேர் நேற்று பணியாற்றினர். ஏற்கனவே, 230 ஆசிரியர்கள் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துள்ளனர். 755 ஆசிரியர்கள் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளனர். தொடக்கப்பள்ளிகளில், 30 சதவீதம் பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், பயிற்றுனர்களால் செயல்படுத்தப்பட்டன. மாறாக உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பல சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதால், பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டன.கண்டன ஆர்ப்பாட்டம்கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.