மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை பிரிக்க வேண்டும்: மக்கள் எதிர்பார்ப்பு
மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தைபிரிக்க வேண்டும்: மக்கள் எதிர்பார்ப்புகரூர், நவ. 1-மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை, இரண்டாக பிரிக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆண்டாங்கோவில் கீழ்பாகம், மேல்பாகம், அப்பிபாளையம், ஆத்துார், பாலாம்மாள்புரம் வரவு, இனாம் கரூர் கிராமம், காருடையாம் பாளையம், கருப்பம்பாளையம், கரூர் டவுன் முதலாவது வார்டு, மூன்றாவது வார்டு, கொடையூர், லட்சுமி நாராயண சமுத்திரம், பள்ளப்பாளையம், பவித்திரம், புன்னம், புத்தாம் புதுார், தாளப்பட்டி, தான்தோன்றிமலை, திருமாநிலையூர், தோரணகல்பட்டி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி உள்ளிட்ட, 22 கிராமங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நிலம், வீடு விற்பனை தொடர்பான பத்திர பதிவுகள், மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. முகூர்த்த நாட்களில் அதிகளவில் பொது மக்கள், பத்திர பதிவுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும், சார்பதிவாளர், இரண்டாவது அலுவலகத்தில் வாங்கல், மண்மங்கலம், காதப்பாறை, நன்னியூர், பஞ்சாமாதேவி, குப்பம், அத்திப்பாளையம், மின்னாம்பள்ளி உள்ளிட்ட, ஒன்பது கிராமங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.இதனால், மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் அல்லது அதில் உள்ள, 22 கிராமங்களை பிரித்து, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் இரண்டாவது அலுவலகத்தில், இணைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், அதிகளவில் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகள் தாமதமாக நடக்கிறது. குறிப்பிட்ட விசேஷ நாட்களில் பத்திரவு பதிவு செய்ய முடியவில்லை. பத்திரங்களை திரும்ப பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை இரண்டாக பிரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அலுவலர்கள் கூறியதாவது:மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை, இரண்டாக பிரிப்பது குறித்து பொதுமக்களிடம் இருந்து, பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது. இது சம்பந்தமாக அரசுக்கு கருத்துரு, ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. சில உயர் அதிகாரிகள் ஆர்வமின்மை மற்றும் அரசியல் காரணங்களுக்காக பிரிப்பு முயற்சி தள்ளி போகிறது. இருப்பினும் சார்பதிவாளர் அலுவலகத்தை பிரிப்பது குறித்து, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.