கரூர்: அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே செட்டிப்பாளையம் அணை, வறண்ட நிலையில் உள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த மாதம், 1 முதல் ஆற்றில் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கேரளா மாநிலம் உள்ளிட்ட, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால், ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 96 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றதால், அணை பகுதிகள் வறண்ட நிலையில் உள்ளது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு, வினாடிக்கு, 706 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.05 அடியாக இருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 96 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மாயனுார் கதவணை:கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 11,479 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 10,831 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 9,211 அடி திறக்கப்பட்டுள்ளது. தென்கரை வாய்க்காலில் வினாடிக்கு, 800 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 820 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.ஆத்துப்பாளையம் அணை:கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.91 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.