| ADDED : ஜன 19, 2024 11:58 AM
கரூர்: சணப்பிரட்டி அரசு பள்ளி வளாகம் முழுவதும் செடி, கொடி வளர்ந்து புதராக மாறி இருப்பதால் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.கரூர் அருகில் சணப்பிரட்டி ஆதி திராவிடர் அரசு உயர்நிலை பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வாளகம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால் பள்ளியைச் சுற்றி புதர்கள் மண்டியுள்ளன. பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறை கட்டடங்களுக்கு நடுவே ஏராளமான செடி, கொடி வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. போதிய பராமரிப்பு இல்லாததால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பள்ளி மைதானம் முள் புதராக மாறியுள்ளதால் மாணவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள், ஆசிரியர்களின் நலன்கருதி பள்ளி வளாகத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.