உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு எப்போது? கரும்பு விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு எப்போது? கரும்பு விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு

கரூர்: பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழா வரும் ஜன.,14ல், போகியுடன் தொடங்குகிறது. ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி, தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதில் பச்சரிசி, சர்க்கரை, நெய் மற்றும் கரும்பு துண்டு வழங்கப்படும். அதற்காக தமிழகத்தில் உள்ள விவசாயிகள், செங்கரும்புகளை பயிரிடுவது வழக்கம். நடப்பாண்டும், மாநிலம் முழுவதும் பொங்கல் விழாவையொட்டி, செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஒரு மாதமே உள்ள நிலையில், பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை, தமிழக அரசு வெளியிடவில்லை. எனவே, கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள், அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 12 மாத பயிரான கரும்பு சாகுபடி தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காவிரியாறு பாயும் மாவட்டங்களில், செங்கரும்பு சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. விதை கரும்பு முதல் வெட்டு கூலி வரை, ஒரு ஏக்கருக்கு, மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகும். 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு, 400 முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்தால்தான், ஓரளவுக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும்.அறுவடை செய்யப்படும் அனைத்து செங்கரும்பையும், பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியாது. மொத்த வியாபாரிகள் பொங்கலுக்காக வாங்கி செல்வர். தமிழக அரசின் அறிவிப்பு. இன்னும் வெளியாகாததால் வியாபாரிகள் வரவில்லை. கூட்டுறவு துறை அதிகாரிகள், செங்கரும்பு சாகுபடி குறித்து, கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். எனவே, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை, தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஏற்பட்ட பெஞ்சல் புயல், வெள்ள பாதிப்பு பணிகளில், உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் தொடர்பில் இருக்கிறோம். விரைவில், பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறும் பணிகள் தொடங்கும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை