ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த, 'குரூப் - 4' தேர்வை, 31,483 பேர் எழுதினர். இதில், 9,736 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம், 41,219 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். கிருஷ்ணகிரி தாலுகாவில் மொத்தம், 44 தேர்வு மையங்களில், 14,215 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இதில், 10,937 பேர் மட்டுமே தேர்வெழுத வந்திருந்தனர். மீதமுள்ள, 3,278 பேர் தேர்வெழுத வரவில்லை. அதேபோல், அஞ்செட்டியில் இரு தேர்வு மையங்களில் மொத்தம், 450 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 98 பேர் தேர்வெழுத வரவில்லை.பர்கூரில், 9 தேர்வு மையங்களில், 2,730 பேரில், 597 பேரும், ஓசூரில், 31 தேர்வு மையங்களில், 9,677ல், 2,803 பேரும், போச்சம்பள்ளியில், 21 மையங்களில், 6,040ல், 1,204 பேரும், சூளகிரியில், 4 தேர்வு மையங்களில், 1,167ல், 255 பேரும், தேன்கனிக்கோட்டையில், 4 மையங்களில், 1,354ல், 365 பேரும், ஊத்தங்கரையில், 16 தேர்வு மையங்களில், 5,586ல், 1,136 பேரும் என மொத்தம், 9,736 பேர் தேர்வெழுத வரவில்லை. 31,483 பேர் தேர்வெழுதினர். கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டார். தேர்வு மையங்கள், 16 பறக்கும் படைகள், 38 நடமாடும் அலகுகள் மூலம் கண்காணிக்கப்பட்டன. 131 மையங்களிலும் வீடியோகிராபர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது.தேர்வு மைய குழப்பம்தேன்கனிக்கோட்டையில் மொத்தம், 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வெழுத விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வழங்கிய ஹால் டிக்கெட்டில், தேர்வு மையம் தேன்கனிக்கோட்டை எனவும், தேர்வு கூடம் முகவரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயக்கோட்டை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குழப்பத்தால் பலர், ராயக்கோட்டைக்கு பதில் தேன்கனிக்கோட்டை சென்றதால், தேர்வு எழுத முடியாத சூழல் உருவானது.