| ADDED : ஜூலை 17, 2024 02:37 AM
அரூர்:அரூரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்து பேசினார். போராட்டத்தில், அரூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து பஞ்.,களிலும், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் குடிநீர், நிழற்கூடம், மருத்துவ வசதி செய்து தர வேண்டும். ஆண்டுக்கு, 200 நாள் வேலையும், தினக்கூலியாக, 600 ரூபாய் வழங்குவதுடன், அரூர் டவுன் பஞ்.,க்கும் விரிவு படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டிக்கொடுத்து, தற்போது சேதமான அனைத்து வீடுகளையும் சரிசெய்ய கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆதிதிராவிட நலத்துறையில் வழங்கிய மனைப்பட்டாவை கிராம நத்தமாக மாற்றி, பட்டா வழங்க வேண்டும். கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தை, வீடு இல்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், நிர்வாகிகள் ஜடையாண்டி, வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.