மத்திய அரசு திட்டத்துக்கு போட்டி பூஜை தி.மு.க., - அ.தி.மு.க., மோதலால் பரபரப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி, கும்பளம் பஞ்., பகுதியில், பிரதம மந்திரி கிராம வளர்ச்சி திட்டத்தில், 6.63 கி.மீ.,க்கு, 5.36 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் சில திட்டங்கள் என, 7.65 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் துவக்க விழா நேற்று நடந்தது.வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., துணை பொது செயலருமான முனுசாமி, பணிகளை பூஜை செய்து துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை அதே பகுதியில், தி.மு.க., கொடிகளை கட்டினர் அக்கட்சியினர். காலை, 7:00 மணிக்கே, தி.மு.க.,வை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், சூளகிரி வடக்கு ஒன்றிய செயலர் நாகேஷ், இளைஞரணி மாநில துணை செயலர் பார்த்தகோட்டா சீனிவாசன் ஆகியோரை வைத்து, பூஜையை நடத்தினர்.இதை அறியாமல், நேற்று காலை, 8:30 மணிக்கு திட்டப்பணிகளை துவக்கி வைக்க முனுசாமி எம்.எல்.ஏ., வந்தார். அப்போது, 'தி.மு.க., ஆட்சியில் நடக்கும் திட்டங்களை துவக்கி வைக்க, தி.மு.க.,வினரே வர வேண்டும். முனுசாமி எதற்காக வருகிறார்' எனக்கூறி, தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.முனுசாமி எம்.எல்.ஏ., ''இது என் தொகுதி, நான் திட்ட பணிகளை துவக்கக்கூடாதா,'' என கேட்டபோது, 'நடப்பது, தி.மு.க., ஆட்சி. திட்டங்களை, தி.மு.க.,வினர் தான் துவக்கி வைக்க வேண்டும்' எனக்கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதை கண்டித்து ராமன்தொட்டி கேட் அருகே, வேப்பனஹள்ளி- - பேரிகை சாலையில், மறியல் போராட்டத்தில் முனுசாமி ஈடுபட்டார். போலீசார் அவரிடம் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து மதியம், 1:30 மணிக்கு மறியலை கைவிட்ட முனுசாமி தரப்பினர், அதே இடத்தில் திட்ட பணிகளுக்கான பூஜையை செய்தனர்.
அரசியல் நாகரிகம் இல்லை
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், ராமன்தொட்டி பகுதியில், மத்திய அரசின் 'பி.எம்.ஜி.எஸ்.ஒய்.,' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., துணை பொதுச் செயலருமான கே.பி.முனுசாமி சென்றார். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், அவரை விழாவில் பங்கேற்க விடாமல், அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்து கொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வை அவமதிக்கும் வகையில், அராஜகப் போக்குடன் செயல்படும், தி.மு.க.,வின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அறவழியில் போராட்டம்
முனுசாமி எம்.எல்.ஏ., கூறியதாவது:ஒரு எம்.எல்.ஏ., தன் ஜனநாயக கடமையை ஆற்ற வரும்போது, எதிர்கட்சியினர் என்றும் பாராமல், எங்கள் மீது வன்முறை தாக்குதலை கையாள தி.மு.க.,வினர் முயன்றனர். இதை கண்டித்து, 4 மணி நேரம் அறவழியில் போராடியதால் நாங்கள், இத்திட்டங்களுக்கு பூஜை செய்தோம்.தமிழகம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி கண்டனத்துக்கு பிறகே, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், போலீசார் எங்களை பூஜை செய்ய அனுமதித்தனர். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும் என்பதை, தி.மு.க.,வினர் மறந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.