| ADDED : ஜூலை 21, 2024 10:53 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஒப்பதவாடி ஊராட்சி, காளியம்மன் கோயில் இருளர் காலனியில் சேதமான வீடுகளை, மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். பின் அவர் கூறுகையில், ''கடந்த 1ல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஒப்பதவாடி ஊராட்சி, காளியம்மன் கோவில் இருளர் காலனி மக்கள் சேதமான தங்களின் வீடுகளை நேரில் பார்வையிட கோரிக்கை வைத்தனர். நேரில் வந்து பார்வையிடுவதாக தெரிவித்திருந்தேன். இன்று (நேற்று) வீடுகள் நேரில் பார்வையிட்டோம். அதன்படி 'ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல்' திட்டத்தில் சிறு பழுது ஏற்பட்டுள்ள வீடு பராமரிப்பு பணிக்கு, 32,000 ரூபாய், பெரும் சேதம் ஏற்பட்டுள்ள ஓட்டு வீட்டிற்கு, 70,000 ரூபாய், சாய்வான கான்கிரீட் கூரை கட்டடத்திற்கு, 1.50 லட்சம் ரூபாய் வரை, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது,'' என்றார்.பர்கூர் தாசில்தார் திருமுருகன், பி.டி.ஓ.,க்கள் கலா, துரைசாமி, பொறியாளர் செல்வம், பணி மேற்பார்வையாளர் நாகராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.