கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 2 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு, 12 கனஅடியாக உள்ளது. நேற்று கே.ஆர்.பி., அணையின் சிறிய மதகின் மூலம், பாரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வினாடிக்கு, 300 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.இந்த தண்ணீர், நெடுங்கல் தடுப்பணை வழியாக பாரூர் ஏரிக்கு செல்கிறது. பாரூர் ஏரியின் மொத்த கொள்ளளவான, 15.60 அடியில் தற்போது, 9.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்ட பின்பு தான், கே.ஆர்.பி., அணை மற்றும் கெலவரப்பள்ளி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்கு பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டி உள்ளதால், கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களாக மழையின்றி வெயிலின் தாக்கம் இருந்ததால், கே.ஆர்.பி., அணையின் நீர்மட்டம், 38 அடியாகவும், பாரூர் ஏரி நீர்மட்டம், 3.60 அடியாகவும் குறைந்தது. இதனால் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் நிலவியது. இம்மாத துவக்கத்தில் பெய்த கோடை மழையால் நீர்வரத்து அதிகரித்து, கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 44.85 அடியாகவும், பாரூர் ஏரி நீர்மட்டம், 9.50 அடியாகவும் உயர்ந்தது. பாரூர் ஏரிக்கு முன்னுரிமை அடிப்படையில், கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், நிலங்களை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு கூறினர்.