ஓசூர்: ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் துர்கா பிரசாத், 24. கடந்த, 8 இரவு, 10:00 மணிக்கு, சீத்தாராம்மேடு பகுதியில் நடந்து சென்ற அவரை வழிமறித்த, 5 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, 1,500 ரூபாயை பறித்து சென்றது. துர்கா பிரசாத் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார், ஓசூர் சீத்தாராம் நகர் நிஜாம், 26, பார்வதி நகர் முகமது இப்ராஹிம், 20, இப்ராகிம், 23, காளேகுண்டா திப்புசுல்தான், 30, கனஞ்சூர் முனிராஜ், 48, ஆகியோரை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.ஓசூர் பழைய வசந்த் நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 54; இவர் நேற்று முன்தினம் காலை, குமுதேப்பள்ளி அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே நின்றிருந்தார். அங்கு வந்த, ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முரளி, 33, சிவராஜ், 37, முகமது உசேன், 31, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் வீரசந்திரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், 34, ஆகியோர், கத்தியை காட்டி மிரட்டி, விஸ்வநாதனிடம், 1,900 ரூபாயை பறித்து சென்றனர். அவர் புகார்படி, 4 பேரையும் ஹட்கோ போலீசார் கைது செய்தனர். ஓசூர் டவுன் மற்றும் ஹட்கோ போலீசாரால் கைதான, 9 பேரும், ஓசூர் பார்வதி நகரில் கடந்த டிச., மாதம் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.