| ADDED : ஜூன் 18, 2024 12:05 AM
ஓசூர் : கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, 37 வயது மதிக்கத்தக்க பெண் யானை, 15 நாட்களுக்கு முன், தமிழக எல்லை ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. பின், மிலிதிக்கி சுற்று வட்டாரத்தில் சுற்றி திரிந்தது. உடல் மெலிந்து காணப்பட்ட அதன் கீழ்தாடையில் காயம் இருந்ததால், உணவு உட்கொள்ள முடியாமல் சோர்வாக காணப்பட்டது. சிகிச்சையளிக்க வனத்துறையினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், அஞ்செட்டி வனச்சரகம், குந்துக்கோட்டை அருகே பனை காப்புக்காட்டில், அழுகிய நிலையில் அந்த யானையின் சடலம் கிடப்பதை, அஞ்செட்டி வனத்துறையினர் நேற்று முன்தினம் பார்த்தனர். நேற்று காலை பிரேத பரிசோதனை செய்தனர்.அதில், யானையின் கீழ் தாடையில் எலும்பு முறிந்து படுகாயம் இருந்தது. காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்ததால் இறந்திருக்கலாம், ஆனால், யானையின் வாயிலிருந்த பற்கள் எதுவும் சேதமாகவில்லை. ஏற்கனவே கீழ்தாடையிலிருந்த காயம் அழுகி உணவு உட்கொள்ள முடியாமலோ, அல்லது மற்றொரு யானை தாக்கியதாலோ இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், அதன் வாய் பகுதி எலும்பு, தசை மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு சென்னை அனுப்பப்பட்டன.பிரேத பரிசோதனைக்கு பின், யானையின் சடலத்தை மற்ற விலங்குகளுக்கு உணவாக வனத்துறையினர் விட்டுச் சென்றனர். ஆய்வறிக்கை வந்த பின், விசாரணை மேற்கொள்ள அஞ்செட்டி வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.