உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 400 ஆண்டு பழமையான கொம்பு இசை கலைஞனின் நடுகல்

400 ஆண்டு பழமையான கொம்பு இசை கலைஞனின் நடுகல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் கங்கமடுகு கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமையான கொம்பு இசைக் கலைஞனின் நடுகல்லை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்று துறை இணை பேராசிரியர் வெங்கடேஸ்வரன், முதுகலை மாணவர் அசோக்குமார் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வமணி ஆகியோர் கள ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.இது குறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: கங்கமடுகு கிராமத்தில் கிடைத்த, 400 ஆண்டுகள் பழமையான கொம்பு இசைக் கலைஞனின் நடுகல்லில், அவர் கன்னம் புடைக்க, கொம்பு இசைக்கருவியை வாயின் நுனிப்பகுதியில் வைத்து வாசிப்பது போல் சிற்பம் உள்ளது. பலசாலியை போல உடலமைப்பும், இடுப்பின் பின்புறம், நீளமான கனத்த கைப்பிடியுடன் கூடிய வாள் ஒன்றும் உள்ளது. அருகில் அவரது மனைவி இடதுகையில் மதுக்குடுவையை பிடித்துள்ளாார்.இசைக்கலைஞன் நீண்ட வாள் வைத்திருக்கும் தோற்றத்தை பார்த்தால், அப்பகுதியில் ஆட்சி செய்த மன்னனின் படைப்பிரிவில் சிறப்புற்று விளங்கிய ஒரு கொம்பு இசைக் கலைஞனாகவும் இருந்திருக்க கூடும். அவர் போரிலோ, இயற்கையாகவோ இறந்திருக்கலாம். அவருடைய வீரத்தையும் கலை திறமையையும் போற்றும் வகையில், அவர் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. தன் கணவன் இறந்தவுடன் அவரது மனைவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். எனவே, இருவரையும் ஒரே கல்லில் சிற்பமாக வடித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ