ஓசூர்: சூளகிரி அருகே, கஞ்சா பொட்டலம் கிடைத்தது தொடர்பாக விசாரணை ஆஜராகுமாறு, போலீசார் அழைத்த நிலையில், விசாரணைக்கு பயந்து, தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கெட்டூரை சேர்ந்தவர் உதயகுமார், 32; ஓசூரில் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்; கடந்த, 14 மதியம், 2:00 மணிக்கு, சூளகிரி போலீசார் கெட்டூர் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது, உதயகுமாருடன் பணியாற்றும் திருப்பத்துாரை சேர்ந்த பெருமாள், ஓசூர் அருகே ஒன்னல்வாடியை சேர்ந்த டேவிட்குமார், அசாம் மாநிலத்தை சேர்ந்த பிப்பி பர்வார் ஆகியோர் நின்றிருந்தனர். சந்தேகத்தின்படி அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, ஒரு சிறிய கஞ்சா பொட்டலம் இருந்தது. இதையடுத்து, பெருமாள், டேவிட்குமார், பிப்பி பர்வார் ஆகியோரை, சூளகிரி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.இதில், மூவருக்கும் உதயகுமார் கஞ்சா கொடுத்தது தெரியவந்தது. இதனால் விசாரணைக்கு ஆஜராக உதயகுமாரை போலீசார் அழைத்தனர். அவர் விசாரணைக்கு வராமல் கடந்த, 14 முதல் மாயமானார். நேற்று முன்தினம் மாலை, கெட்டூர் வீரபத்திர சுவாமி கோவில் அருகே, அவரது நிலத்திலுள்ள புளியமரத்தில் துாக்கில் தொங்கி அழுகிய நிலையில் உதயகுமார் சடலம் மீட்கப்பட்டது. அவர் விசாரணைக்கு பயந்து துாக்கில் தொங்கியிருக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.