| ADDED : மார் 20, 2024 01:50 AM
கிருஷ்ணகிரி:தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20) துவங்குகிறது. ஏப்., 19ல் ஓட்டுப்பதிவும், ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்க உள்ளன. இந்நிலையில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி, 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள், 3 சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். நேற்று கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய கோலங்களை பணியாளர்கள் வரைந்தனர். இக்கோலங்களை பொதுமக்கள் பலர் பார்வையிட்டு சென்றனர்.கிருஷ்ணகிரியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மாணவியரின் சிலம்பாட்டத்துடன் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணியை கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் துவக்கி வைத்தார். இதில், பள்ளி மாணவியர் சிலம்பாட்டத்துடன், கல்லுாரி மாணவ, மாணவியர் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, பெங்களூரு சாலை வழியாக, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, தாசில்தார் சுப்பிரமணி, சிலம்ப பயிற்சியாளர் குரு ராகவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.