கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஓசூர், ஓசூர், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. அலகு குத்தி பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஓசூர், ராம்நகரில் உள்ள பழமையான சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவ விழா கடந்த மாதம், 29ல் கொடியேற்றம் மற்றும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு திருவிழா மற்றும் ஊர் பண்டிகை நேற்று நடந்தது. சுயம்பு கோட்டை மாரியம்மன், பிளேக் மாரியம்மன், துக்கிலியம்மன், மணல் மாரியம்மன், கங்கம்மன், எல்லம்மன், மந்தை மாரியம்மன் உட்பட, 7 கோவில்களுக்கு, நகரின் பல்வேறு இடங்களில் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.அதேபோல், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், முதுகு, வாயில் அலகு குத்தி, பறவை காவடி எடுத்து, கிரேனில் தொங்கியபடி கோவிலுக்கு சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆண், பெண் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி, அம்மன் சிலையுடன் கூடிய வாகனங்களை இழுத்து சென்றனர். அம்மன், காளி, சிவன், விஷ்ணு என சுவாமி வேடங்கள் அணிந்தும், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.ஓசூர் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நகரில் ஆங்காங்கு பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது. விழாவில் இன்றிரவு, 7:00 மணிக்கு சிடி உற்சவம் மற்றும் பூ மிதித்தல், அலங்கரித்த பல்லக்கில் சுயம்பு கோட்டை மாரியம்மன் ஊர்வலம் நடக்கிறது.