| ADDED : ஆக 06, 2011 02:01 AM
ஓசூர்: ஓசூர் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. ஓசூர் அடுத்த ஜோனபெண்டாவில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த 170 ரேஷன் கார்டு வைத்திருப்போர், பல கி.மீ., தொலைவில் உள்ள ஒன்னல்வாடி ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் ஒன்னல்வாடி சென்று ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். அதனால், ஜோனபெண்டாவில் பகுதி நேர ரேஷன் கடையை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறத்தி வந்தனர். இதையடுத்து ஓசூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கோபிநாத் முயற்சியால், ஜோனபெண்டாவில் நேற்று பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. கடையை எம்.எல்.ஏ., கோபிநாத் திறந்து வைத்தார். தி.மு.க., நகர செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடசாமி, பஞ்சாயத்து தலைவர் கவிதா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனி வீரப்பா, முனியப்பா, கூட்டுறவு சார்பதிவாளர் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் வரலட்சுமி, ஆர்.ஐ.,க்கள் வெங்கடேஷ், சிவப்பா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.