| ADDED : நவ 13, 2025 02:34 AM
கிருஷ்ணகிரி: வாங்காத கடனுக்கு, தன்னையும், குடும்பத்தையும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயி நேற்று புகார் மனு அளித்துள்ளார். விவசாயி பெருமாள், 45, என்பவர் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி அடுத்த பூவத்தி பஞ்., கெட்டூரில், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறேன். என் அண்ணன் வாங்கிய கடனை, நான் அடைக்கக்கூறி, எங்கள் ஊர் பெரியவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து, '75,000 ரூபாய் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்' என்றனர். அதை பெற்றுக்கொண்ட பின், மேலும், 75,000 ரூபாய் கொடுக்க தொல்லை கொடுத்தனர். எங்களால் தர முடியவில்லை. இதனால் குடும்பத்தை, 8 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எங்கள் குடும்பத்தின் சுப, துக்க நிகழ்ச்சிகள் போன்றவற்றில் யாரும் பங்கேற்பதில்லை. இதை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.