கிருஷ்ணகிரி: ஓசூர், ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் சத்யபிரியா, 36; தனியார் நிறுவன ஊழியர். இவரை கடந்த, 4ல் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், உங்களுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சட்ட விரோத போதை பொருட்கள் வந்துள்ளன. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உள்ளனர். அவர்கள் உங்கள் மீது வழக்கு போடாமல் இருக்க வேண்டுமெனில், அவர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு, 5 லட்சம் ரூபாய் அனுப்பி வையுங்கள் எனக்கூறியுள்ளனர்.அதை நம்பிய சத்யபிரியா, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 5 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தார். அதன் பின் அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் அவர், தன்னை தொடர்பு கொண்டவர்களுக்கு போன் செய்தபோது அந்த எண்கள், 'சுவிட்ப் ஆப்' ஆகியிருந்தன.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து நேற்று முன்தினம் கொடுத்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.வழக்கில் சாட்சி சொன்னவரை கொல்ல முயன்ற நால்வர் கைதுஓசூர்: ஓசூர், பார்வதி நகரில் கடந்த டிச.,ல் முன்விரோத தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஓசூர், சானசந்திரத்தை சேர்ந்த ரபிக், 34 என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டார். அவர், சாட்சி சொல்லக்கூடாது என கடந்த வாரம், மொபைலில் மிரட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்று சானசந்திரம் அருகே சென்ற ரபீக்கை, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கி, கொலை செய்ய முயன்றது. இது குறித்து ரபீக் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், அவரை தாக்கிய ஓசூர் பாரதிதாசன் நகர் நவாஸ், 38, பெரியார் நகர் முபாரக், 27, சானசந்திரம் அப்பு, 22, சுஹேல், 37 ஆகிய, 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவர்கள் மீது, ஏற்கனவே ஓசூர் போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.