ஓசூர்: ஓசூர், மரகதாம்பிகை அம்மன் புதிய தேர் தயாராக உள்ளதால் வரும், 24ல் வெள்ளோட்டம் விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின்போது, 600 ஆண்டுகள் பழமையான மரகதாம்பிகை அம்மன் தேர் இழுக்கப்படும். இத்தேர் மிகவும் மோசமாக இருந்ததால், ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் கோவில் தேர் கமிட்டி, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய தேரை செய்யும் பணியை கடந்த, 2022 ஜூன், 3ல் துவங்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில், அறநிலையத்துறை சார்பில் தேரின், 4 சக்கரங்களுக்கு தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டது. ஆனால், சக்கரம் தயார் செய்ய கூடுதல் செலவானது. அந்த பணத்தை அறநிலையத்துறை வழங்காத நிலையில், கோவில் தேர் கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கூடுதலாக, 4.57 லட்சம் ரூபாய் வழங்கி, 4 தேர் சக்கரங்களை பெற்று வந்தனர். இந்த சக்கரங்களை தேரில் பொருத்தும் பணி முடிந்த நிலையில், வரும், 24ம் தேதி காலை உற்சவ மூர்த்தி இல்லாமல், தேரை வெள்ளோட்டம் விட, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.அதற்கு தேவையான ஏற்பாடுகளை, தேர் கமிட்டி தலைவர் மனோகரன் மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. தேர் வெள்ளோட்டம் முடிந்த பின், வரும் மார்ச், 25ல் நடக்கும் தேரோட்டத்தின் போது, புதிய தேர் பயன்படுத்தும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.