| ADDED : பிப் 16, 2024 09:58 AM
ஓசூர்: ஓசூர் அடுத்த சிச்சிருகானப்பள்ளியை சேர்ந்தவர் எல்லண்ண கவுடா, 50; இவர், காஸ் டேங்கர் லாரி டிரைவர். இவர் மனைவி கவுரம்மா, 40; இவர், அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். எல்லண்ண கவுடா, தன் மனைவி கவுரம்மா பணியாற்றும் பள்ளியில், சில ஆண்டுகளுக்கு முன் டிரைவராக பணியாற்றினார். அப்போது கவுரம்மாவிற்கும், பள்ளியின் போக்குவரத்து பிரிவு மேற்பார்வையாளர் அருண் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்து கவுரம்மாவை கண்டித்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, பள்ளி பஸ் டிரைவர் மகேஷ், கவுரம்மாவை பஸ்சில் அழைத்துக் சென்றுள்ளார். இதை கவனித்த எல்லண்ண கவுடா, டேங்கர் லாரியில், மனைவி சென்ற பஸ்சை பின் தொடர்ந்தார். சிச்சிருகானப்பள்ளியிலுள்ள பேட்டரி கம்பெனி அருகே பள்ளி வாகனத்தின் மீது, டேங்கர் லாரியால் மோதினார். இதில், பள்ளி வாகனம் சேதமடைந்தது. இது குறித்து, கவுரம்மா புகார் படி, பாகலுார் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, எல்லண்ண கவுடாவை கைது செய்தனர்.