கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 4வது நாளான நேற்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். தாசில்தார்கள் இளங்கோ, குருநாதன், சித்ரா, வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களின் பணி இறக்கம், பெயர் மாற்றம், விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலிபணியிடங்களை நிரப்புதல், மேம்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், கடந்த, 13ல், தற்செயல் விடுப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 22ல், தொடர் பணி புறக்கணிப்பு, அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால், மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது.இதனால், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின.வருவாய்த்துறையில் எப்பணிகளும் நடக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.* ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி தாலுகாவில், அலுவலக உதவியாளர்களில் துவங்கி, 34 தாசில்தார்கள், 90 ஊழியர்கள் என மொத்தம், 124க்கும் மேற்பட்டவர்கள், அலுவலகங்களை மூடி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் பாதித்து மக்கள் சிரமப்பட்டனர். ஓசூர் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க, மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தாசில்தார் விஜயகுமார், தனி தாசில்தார்கள் முத்துபாண்டி, செந்தில், பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.