| ADDED : பிப் 19, 2024 10:30 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜூவாடியில், 15வது நிதிக்குழு மானியத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படும், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித்துறை முதன்மை செயலருமான பீலா வெங்கடேசன் ஆய்வு செய்தார். தின்னுாரில், 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்த்தேக்க தொட்டியில், ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தில், குடிநீர் வினியோக பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி கூட்டரங்கில், அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார். கூடடத்தில், கண்காணிப்பு அலுவலர் பீலா வெங்கடேசன் தலைமை வகித்து பேசியதாவது: அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். கோடை காலம் துவங்க உள்ள நிலையில், பொதுமக்களுக்கு குடிநீரை சீராக வழங்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சூளகிரி தாலுகாவில் கடந்த மாதம் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில், அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளனர். அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா, மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் பெரியசாமி, தனி டி.ஆர்.ஓ., பவனந்தி, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா உட்பட பலர் உடனிருந்தனர்.