உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மோசமான நிலையில் பாசன கால்வாய்கள்; ரூ.9.70 கோடியில் புனரமைப்பு பணிகள்

மோசமான நிலையில் பாசன கால்வாய்கள்; ரூ.9.70 கோடியில் புனரமைப்பு பணிகள்

ஓசூர்: ஓசூர், சூளகிரி தாலுகாவில், மோசமான நிலையில் உள்ள கெலவரப்பள்ளி அணை பாசன கால்வாய்களை புனரமைப்பு செய்யும் பணி நேற்று துவங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 21.99 கி.மீ., துாரத்திற்கு வலது கால்வாய், 25.50 கி.மீ., துாரத்திற்கு இடது கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இடது கால்வாயிலிருந்து, 5 கிளை கால்வாய்கள் செல்கின்றன. அதனால் மொத்தம், 72.57 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் வசதி உள்ளது. ஆண்டுதோறும் ஓசூர், சூளகிரி தாலுகாவிலுள்ள, 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், இருபோக விவசாய பாசனத்திற்கு, வலது, இடது கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும்.இந்நிலையில், வலது, இடது கால்வாய்களில் கரைகள் பலவீனமான உள்ள இடங்களை கண்டறிந்து புனரமைப்பு செய்யும் பணியை மேற்கொள்ள, நீர்வளத்துறை மூலம் மொத்தம், 9.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இடது கால்வாய் செல்லும் வழியிலுள்ள பூதிநத்தம் பகுதியில், தொட்டி போன்ற தோற்றத்தில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இது மோசமான நிலைக்கு சென்றதால், கடந்த சில ஆண்டுகளாக, அதன் வழியாக, குழாய் அமைத்து பாசனத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த புனரமைப்பு திட்டத்தில், தொட்டி கால்வாயை புதிதாக அமைக்க உள்ளனர். இப்பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், நேற்று விவசாயிகளுடன் சேர்ந்து பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இப்பணிகள் முடிந்தவுடன், அடுத்தாண்டு பிப்., அல்லது மார்ச் மாதம், 2ம் போக பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என, நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ