உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மயான பிரச்னைக்கு தீர்வு காண கோரி இருளர் இன மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மயான பிரச்னைக்கு தீர்வு காண கோரி இருளர் இன மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அடுத்துள்ளது காமாட்சிபுரம் கிராமம். இங்கு, 70-க்கும் மேற்பட்ட வீடுகளில், 500க்கும் அதிகமான இருளர் மக்கள் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள், மயான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வலியுறுத்தி, தங்கள் வீடுகளில் கறுப்பு கொடியை ஏற்றி, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'ஜெகதேவியில், 100-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வந்த நிலையில், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்னர், காமாட்சிபுரம் மற்றும் காந்திநகர் பகுதிகளில் குடி அமர்த்தப்பட்டோம். எங்களுக்கு ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே கரியன்கொள்ளை என்னுமிடத்தில் மயானம் உள்ளது. இந்நிலையில், மயான பாதை மற்றும் மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கிரானைட் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். சமீபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல், பல்வேறு சிரமங்களுக்கு இடையே அடக்கம் செய்தோம். தொடர்ந்து மயானம் ஆக்கிரமிப்பை மீட்டு, சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்' என்றனர். தகவலறிந்து வந்த பர்கூர் உதவி தேர்தல் நடத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேர்தலுக்கு பின்பு மயான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, வீடுகளில் கட்டப்பட்டு இருந்த கறுப்பு கொடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை