அரசு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு அறிவுரை
ஓசூர், ஓசூரில் நேற்று சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் மற்றும் குழு உறுப்பினர்கள், கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலையில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஓசூர் மத்திகிரி கால்நடை பண்ணைக்கு சென்ற குழுவினர், கால்நடை வளர்ப்பு, கால்நடை இனப்பெருக்கத்திற்கான பணிகள், பால் உற்பத்தி குறித்தும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள் குறித்தும், கால்நடைத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.ஓசூரில், 11.53 ஏக்கர் பரப்பளவில், 30 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். ஓசூர் பன்னாட்டு மலர் ஏற்றுமதி மையத்தை பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான துவரை, ராகி விதைகள், விசைத்தெளிப்பான்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.மதிப்பீட்டு குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.,க்களுமான உதயசூரியன், சேவூர் ராமச்சந்திரன், வெங்கடேசன், பாலாஜி, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், சட்டபேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், துணை செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து, 15 மாற்றுத்திறனாளிகளுக்கு, 4.14 லட்சம் ரூபாய் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், கூட்டுறவு துறை சார்பில், 10 பேருக்கு மொத்தம், 45 லட்சம் ரூபாய் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.