ஆசிரியர் வீட்டில் திருடிய 2 பேர் கைதுதர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின், 43; இலக்கியம்பட்டி அரசு காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர்; இவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த மாதம், 20ம் தேதி இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த, 30 பவுன் நகைகள் திருடு போயின.இது தொடர்பாக, அதியமான்கோட்டை போலீசார் கடந்த வாரம் சென்னை எண்ணுாரை சேர்ந்த சிவா, 32 என்பரை கைது செய்த நிலையில், நேற்று சென்னை நொச்சிக்குப்பம் இயேசு, 28, என்பவரை போலீசார் கைது செய்தனர். பின் அவர்களிடமிருந்து, 30 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.ஆங்கில புத்தாண்டையொட்டிபூக்கள் விலையில் உயர்வுதர்மபுரி, டவுன் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள பூக்கடைகளுக்கு மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி உட்பட, பல்வேறு மலர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டிலுள்ள கடைகளுக்கு, விவசாயிகள் அதிகாலை முதல், பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இங்கு நேற்று, ஒரு கிலோ சன்னமல்லி, 1,200 ரூபாய்க்கும், குண்டுமல்லி, 1,000 ரூபாய், கனகாம்பரம், 800, ஜாதிமல்லி, 500, காக்கட்டான், 400, சாமந்தி, 100, பன்னீர் ரோஸ், 120, அரளி, 130 முதல், 260 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த சில தினங்களாக, பூக்களின் விலை குறைந்திருந்த நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பூக்களின் விலை அதிகரித்தது. இருப்பினும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை அதிகளவில் வாங்கி சென்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர்சங்க மாவட்ட பொதுக்குழுதமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நேற்று, அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார். இதில், சி.பி.எஸ்., ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சி.பி.எஸ்.இ.,யில் பாடக்குறைப்பு செய்தது போல், தமிழ்நாடு அரசும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடத்தை குறைக்க வேண்டும்.காலை உணவு திட்டத்தை, அரசு பள்ளிகளில், 12ம் வகுப்பு மாணவர்கள் வரை வழங்க வேண்டும். மருத்துவம், பொறியியல் மற்றும் கலைக்கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு ஆடிட்டரை நியமித்து, பங்கு சந்தை, பரஸ்பர நிதி சுயதொழில் பற்றி, மாணவர்கள் இடையே, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் கணபதி நன்றி கூறினார்.வேலை வாங்கி தருவதாகமோசடி; 3 பேர் மீது வழக்குஊத்தங்கரையை அடுத்த, கீழ்மத்துாரை சேர்ந்தவர் சேகர்; இவர் மனைவி அமுதா, 40, விவசாயி; இவர்களது மகன் பிரசாந்த்; இவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக, அதே பகுதியில் உள்ள, ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கராஜ், 65, அவரது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியையுமான சாந்தி, 54, ஆகியோர் கடந்த, 2017ம் ஆண்டு, 3.70 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு, பணிக்கான நியமன ஆணையை கொடுத்துள்ளனர். ஆனால் அது போலி ஆணை என தெரியவந்தது. இதனால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட அமுதாவை, தங்கராஜ், சாந்தி அவர்களது மகள் அனுபிரியா ஆகியோர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, நேற்று முன்தினம் அமுதா புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அரூரில் பா.ஜ., கட்சி அலுவலகம் திறப்புதர்மபுரி மாவட்டம், அரூரில், பா.ஜ., சட்டசபை கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் பிரவீன் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில துணை தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான ராமலிங்கம் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: அரூரில் வரும், 8ல் நடக்கவுள்ள தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு பொதுமக்களை நிர்வாகிகள் அதிகளவில் அழைத்து வர வேண்டும். யாத்திரைக்கு கிராமங்களில் வைக்கப்படும் பேனரில், உள்ளூர் பிரமுகர்களின் படங்கள் அதிகளவில் இடம் பெற வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் குறைந்தபட்சம், அரூர் சட்டசபை தொகுதியில், 5,000 முதல், 7,000 ஓட்டுக்களை, தாமரை சின்னத்திற்கு அதிகம் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு உள்ளது. அப்படி இருந்தால் தான், 2026 சட்டசபை தேர்தலில், அரூர் தொகுதியில் நாம் வெற்றி பெற முடியும். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை இந்நாட்டு மக்கள், பாரத பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வை நாம் ஊட்டுகின்ற போது, பணபலம், படை பலம், அதிகார பலம் இதெல்லாம் வராது. இவ்வாறு, அவர் பேசினார். விழாவில், மாவட்ட தலைவர் பாஸ்கர், நகர தலைவர் ஜெயக்குமார் வெங்கட்ராஜ், நிர்வாகிகள் சாட்சாதிபதி, சாமிக்கண்ணு, ராஜேந்திரன், கிருத்திகா, சரிதா, கிருஷ்ணவேணி, செந்தில்குமார் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் பணிஅயோத்தியில் வரும், 22ல் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் அட்சதை அரிசி மற்றும் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கும் பணி தர்மபுரியில், விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., சார்பாக நேற்று தொடங்கியது.முதல் கும்பாபிஷேக அழைப்பிதழை, தர்மபுரி எஸ்.வி., ரோட்டிலுள்ள அபய ஆஞ்சநேயருக்கு வழங்கப்பட்டது. அழைப்பிதழை விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக இணை செயலாளர் விஷ்ணு, மாவட்ட செயலாளர் பசுபதி, ஆர்.எஸ்.எஸ்., சங்க சாலர் சந்திரசேகர், தர்மபுரி மாவட்ட, பா.ஜ., பொதுச்செயலாளர் முருகன் உள்ளிட்டோர், கோவில் அர்ச்சகர் வாசுதேவனிடம் வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக் கொண்ட அவர், ஆஞ்சநேயரிடம் வைத்து சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து, தர்மபுரி நகர பகுதி உட்பட, மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கினர். வரும், 15க்குள், மாவட்டத்தில், ஒரு லட்சம் பேருக்கு, கும்பாபிஷேக அழைப்பிதழ், அட்சதை அரிசி வழங்கப்பட உள்ளது.ஆங்கில புத்தாண்டையொட்டி கேக் விற்பனை அமோகம்தர்மபுரி மாவட்ட பேக்கரிகளில், ஆங்கில புத்தாண்டு விற்பனைக்காக கேக் தயாரிப்பு அதிகரித்துள்ளது. அரை கிலோ கேக், 200 முதல், 1,500 ரூபாய் வரை உள்ளது. இதில், பிளாக் பாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட், சாக்கோ ட்ரபுள், ரெட், வெல்வெட், சாக்லேட், க்ரீன் என, 50 வகையான கேக்குகள் வடிவமைத்து விற்பனைக்காக வைத்துள்ளனர்.அரூரிலுள்ள பேக்கரிகளில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை கவரவும், பல்வேறு வடிவங்களில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரை கிலோ முதல், 5 கிலோ அளவு வரை தயாரிக்கப்பட்டுள்ள கேக்குகள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுசூளகிரியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நேற்று நடந்தன. உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவன தலைவர் சுதாகரன், போட்டிகளை துவக்கி வைத்தார். ஒற்றை கொம்பு, இரட்டை கொம்பு, தொடுமுறை ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 5 முதல் 10 வயது, 11 - 13, 14 - 17, 18 - 24 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஓசூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தக்குமார், சூளகிரி வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் மணிமாறன், சூளகிரி லாரி அசோசியேஷன் தலைவர் ராமசந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.போதையில் வாலிபர்கள் தகராறு: தடுத்த விவசாயி கத்திக்குத்தில் பலிகாரிமங்கலம் அருகே, மதுபோதையில் தகராறு செய்த வாலிபர்களை தடுத்த விவசாயிக்கு, கத்தி குத்து விழுந்ததில் பலியானார்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியமிட்டஹள்ளியை சேர்ந்தவர் சரவணன், 34, விவசாயி; அப்பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தில் நேற்று மாலை, 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மது அருந்தி விட்டு, சண்டையிட்டு கொண்டிருந்தனர். அவர்களை சமாதானப்படுத்த முற்பட்டபோது, மது போதையிலிருந்த வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில், சரவணன் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, 11 பேரை காரிமங்கலம் போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.இறந்த சரவணனுக்கு, அர்ச்சனா என்ற மனைவியும், ஆகாஷ், 3, பிரதீஷ், 2 என்ற, 2 குழந் தைகளும் உள்ளனர்.காலிபிளவர் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சிதர்மபுரி மாவட்டத்தில், அரூர் அடுத்த கொளகம்பட்டி, மங்கானேரி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், தக்காளி, கத்திரி, வெண்டை, அவரை, காலிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு, காலிபிளவர் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால், கடந்தாண்டை விட, நடப்பாண்டு விவசாயிகள் குறைந்த பரப்பில், காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக காலிபிளவர் விலை அதிகரித்து, அளவை பொறுத்து பூ ஒன்று, 20 முதல், 30 -ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.துாய்மை பணியாளர்களுக்கு ஆங்கில புத்தாண்டு பரிசுஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்தார். துாய்மை பணியாளர்கள் கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.பாரதியார், ராஜாஜி பிறந்த நாள் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரா மண்டபத்தில், பிராமணர் நலச்சங்கம் சார்பில், பாரதியார் மற்றும் ராஜாஜி பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, பாட்டுப்போட்டி ஆகியவை நடந்தன. சங்க தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்து இப்போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், 'நாட்டின் விடுதலை போராட்டத்தில் பாரதியாரின் பங்கு' அல்லது 'நாட்டின் விடுதலைக்கு முன்பும், பின்பும் ராஜாஜியின் அரசியல் வாழ்க்கை' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், 'பாரதியாரின் பார்வையில் நாம்', 'பாரதி நீ ஒரு பாரதத் தீ', 'தேச முன்னேற்றத்தில் ராஜாஜி' என்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டியும், பாரதியார் பாடல்களில் பாட்டு போட்டியும் நடத்தப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முதல், 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.மாநில இறகு பந்து போட்டிகலைஞர் நுாற்றாண்டு விழா மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, மாநில அளவிலான, இறகு பந்து போட்டி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்தார். தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் ஹரி விக்னேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இப்போட்டியில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும், 50 வயது வரை உள்ளவர்கள் என இரு பிரிவாக, போட்டி நடந்தது. சென்னை, ஈரோடு, கோவை, சேலம், தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 60க்கும் மேற்பட்ட, விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், முதல் பரிசு, 25,000, 2வது பரிசு, 20,000, 3வது பரிசாக, 15,000 மற்றும் சான்றிதழ் வழங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் இளையசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் பரிசுகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், தர்மபுரி சேர்மன் லட்சுமிமாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர்ஆங்கில புத்தாண்டு வாழ்த்துஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன், 'அனைவரும் வளமுடனும், நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க, ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன். இந்த ஆங்கில புத்தாண்டு முதல், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலன்களும் கிடைத்து, நோயின்றி, ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல், தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் தட்ரள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், வேப்பனஹள்ளி முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர், 'பொதுமக்கள் அனைத்து வளங்களை பெற்று, நலமுடன் வாழ, ஆங்கில புத்தாண்டு வாழ்த்து'க்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.ஆலோசனை கூட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் பிரகாசம் தலைமை வகித்தார். முன்னதாக, கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி, தமிழ் வரவேற்றார். கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சரவணன், தமிழ், ரேவந்த், ஆதிகேசவன், தொழிலதிபர் ராமலிங்கம், யுனிக் கல்லுாரி தாளாளர் அருள், தொழிலதிபர் சரவண பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், கொங்கு இளைஞர்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனைபோச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று சுற்று வட்டாரத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தற்போது தொடர் மழை மற்றும் ஆங்கில புத்தாண்டு வருடப்பிறப்பு உள்ளிட்டவைகளையொட்டி வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகளை வளர்க்கவும், அதிகளவு வந்திருந்தனர்.இதனால் நேற்று, 10 முதல் 12 கிலோ எடை கொண்ட ஆடு, 6,000 முதல், 7,000 ரூபாய் வரையும், 15 முதல், 20 கிலோ எடை கொண்ட ஆடு 8,000 முதல், 11,000 ரூபாய் வரையும் விற்பனையானது. இதன்படி, போச்சம்பள்ளி வாரச்சந்தையில், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையாகின.விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கல்கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம் சார்பில், காவேரிப்பட்டணம் அடுத்த பாப்பாரப்பட்டி கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்திட்டத்தில், உழவர் விழா மற்றும் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் மற்றும் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் பேசுகையில், வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வழங்கப்படும் புதிய சாகுபடி தொழில் நுட்பங்களை சரியான முறையில் கடைபிடித்து, அதிக வருமானம் பெறவும், சிறுதானிய சாகுபடி செய்ய வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், வங்கிகள் மூலம் வழங்கப்படும் விவசாய கடன் அட்டை திட்டம் குறித்து விளக்கினார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா, உழவன் செயலியின் பயன்பாடு முறைகளையும், வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்திட்டத்தில், 25 விவசாயிகளுக்கு நாட்டுக் கோழியும், 50 விவசாயிகளுக்கு எலுமிச்சை செடிகளும், 20 விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவியும், சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப புத்தகமும் வழங்கப்பட்டன.