உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் ஊழியர், பெண்ணிடம் ரூ.30.73 லட்சம் மோசடி

தனியார் ஊழியர், பெண்ணிடம் ரூ.30.73 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், 15.39 லட்சம் ரூபாய் மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி, இளம்பெண்ணிடம், 15.34 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கொட்டாவூரை சேர்ந்தவர் ரமேஷ், 45. தனியார் நிறுவன ஊழியர். கடந்த அக்., 29ல் அவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், சில நிறுவனங்கள், இணையதள விபரங்களுடன், சில 'லிங்கு'கள் அனுப்பப்பட்டன. அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதை நம்பிய ரமேஷ், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில், பல தவணைகளில், 15.39 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன் பின், அந்த இணையதள பக்கங்கள் முடங்கின. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்-.இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நெல்லுாரை சேர்ந்தவர் வாசுகி, 24. கடந்த ஜூலை, 28ல், அவரது மொபைல்போனுக்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்படும் என மெசேஜ் வந்தது. இதற்காக ஆவண கட்டணம், நடைமுறை செலவுகளுக்கான கட்டண தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதை நம்பிய வாசுகி, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 15.34 லட்சம் ரூபாயை அனுப்பினார்.ஆனால் அவருக்கு, எந்த கடனும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனக்கு குறுந்தகவல்கள் வந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது அது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அவர் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த இரு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி