ஓசூர், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற தலைப்பில், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தன. இதில், மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற, 524 மாணவர்கள், 1,784 மாணவியர் என மொத்தம், 2,308 பேர், 38 மாவட்டங்களிலிருந்து பங்கேற்றனர். நடனம், ஓவியம், மாறுவேட போட்டி, நாட்டுப்புற நடனம் உட்பட மொத்தம், 24 போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். முன்னதாக, மாவட்ட கலெக்டர் தலைமையில், 76வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு முகவுரை குறித்த உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட சி.இ.ஓ., மதன்குமார், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.