| ADDED : மார் 09, 2024 12:35 AM
ஓசூர், கிராமங்களை ஒட்டி யானைகள் சுற்றித்திரிந்ததால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 100 க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் சுற்றித்திரிகின்றன. இதில், ஜவளகிரி காப்புக்காட்டில் தனியாக முகாமிட்டிருந்த மூன்று யானைகள், நேற்று அதிகாலை நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, கெண்டகானப்பள்ளி, மலசோனை ஆகிய கிராமத்தை ஒட்டி சுற்றித்திரிந்தன. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் மற்றும் வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். விவசாய நிலங்கள் வழியாக வனப்பகுதியை நோக்கி யானைகள் சென்றதால், பல்வேறு இடங்களில் விவசாய பயிர்கள் நாசமாகின. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிராமங்களை நோக்கி யானைகள் அடிக்கடி படையெடுத்து வருவதை தடுக்கும் வகையில், அவற்றை கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.