| ADDED : ஜூன் 20, 2024 06:08 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், மட்கும் குப்பை, மட்காத குப்பையை தனியாக பிரிப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப் படையுடன் இணைந்து தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில், மட்கும் குப்பை, மட்காத குப்பை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை வகித்தார். தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்கள் பவுன்ராஜ், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி அலுவலக செயல் அலுவலர் கீதா, மட்கும் குப்பை, மட்காத குப்பை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பயிற்சி முகாமில், 1,100 மாணவர்கள் கலந்து கொண்டனர். மட்கும் குப்பையை கொண்டு இயற்கை உரம் எவ்வாறு தயாரிப்பது, மட்காத குப்பையை பயன்படுத்தி எவ்வாறு சாலை அமைப்பது என்பது குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தேசிய மாணவர் படை அலுவலர் கோபு, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பு உள்பட பலர் பங்கேற்றனர்.