| ADDED : மே 24, 2024 06:59 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளிலுள்ள மொத்த விற்பனை கடைகளில் அரசு தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களான பாலீத்தின் கவர், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவைகள் உள்ளதா என, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்தனர். இதில், 200 கிலோ அளவில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ''ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுடன், மண் வளமும் கெடுகிறது. பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேருகிறது. இது குறித்து, கடைகளுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கினோம். தற்போது, 4 குழுக்களாக ஒரே நேரத்தில் செய்த சோதனையில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைத்த கடைக்காரர்களிடம், 25,000 ரூபாய் அபராதம் மட்டும் விதித்துள்ளோம். இச்செயல்களை அவர்கள் தொடர்ந்தால் அவர்களது தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்,'' என்றார்.துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், மேலாளர் தாமோதரன், துப்புரவு ஆய்வாளர்கள் அங்கமுத்து, மாதேஸ்வரன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், களப்பணி உதவியாளர், துாய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர் மற்றும் துாய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.