கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மாதம் பெய்த மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்தது.கடந்த வாரம் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கே.ஆர்.பி., அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி கடந்த, 14ல் அணைக்கு வினாடிக்கு, 943 கன அடியாக நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 1,072 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது.பின்னர் போதிய மழையின்றி படிப்படியாக நீர்வரத்து குறைந்து நேற்று, 438 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 426 கன அடி, கால்வாயில், 12 கன அடி என, அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.95 அடியாக இருந்தது. கிருஷ்ணகிரியில் நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில், மழை பெய்யவில்லை.