மதுரை : மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் வழங்க வேண்டிய சிறப்பு கட்டணம் குறித்து அதிகாரிகள் விபரம் கேட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு வழங்காத நிதியை இந்தாண்டாவது மாநராட்சி வழங்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் கோருகின்றனர்.கடந்த தி.மு.க., ஆட்சியில் மாணவர்களின் கல்விச் சிறப்புக் கட்டணங்களை அரசே ஏற்கும் என அறிவித்தது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கான தொகையை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசே வழங்கி வந்தது. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை 2008ம் ஆண்டு முதல் கட்டமாக மாணவர்களுக்கான சிறப்பு கட்டணம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.அதன் பின் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இக்கட்டணத்தை மாநகராட்சிக்கு அரசு வழங்கிவிட்டதாகவும், ஆனால் மாநகராட்சி பள்ளிகளுக்கு பிரித்து வழங்கவில்லை.
அத்தொகையை வேறு பயன்பாடுகளுக்கு திருப்பிவிட்டுவிட்டது என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு (2011-2012) மாணவர்களுக்கு சிறப்பு கட்டணத்தை வழங்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் மாநகராட்சியின் கல்விப் பிரிவு சுற்றறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியுள்ளது. அதில், 'மதுரை மாநகராட்சியின் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு கட்டணம், மதுரை மாநகராட்சிக்கு நிதிஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை, வகுப்பு வாரியாக மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு, தங்கள் பள்ளியின் பட்டியலை ஜூலை 15ம் தேதிக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளனர்.கட்டண விபரமாக, '6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு மாணவருக்கு ரூ. 29 வீதமும், 9, 10ம் வகுப்பு வரை ரூ. 41ம், 11, 12ம் வகுப்புகளுக்கு அறிவியல் பிரிவுக்கு ரூ. 93ம், தொழிற் கல்வி பிரிவிற்கு ரூ. 83ம், கலைப் பாடப்பிரிவுக்கு ரூ. 63ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணப்படி பள்ளிக்கு சேரவேண்டிய மொத்த தொகையை அனுப்பும்படி தெரிவித்துள்ளனர். மாநகராட்சிப் பள்ளி அனைத்து ஆசிரியர் மன்ற நிறுவனர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, ''கடந்த மூன்றாண்டாக பள்ளிகளுக்கு இத்தொகை வழங்கப்படவில்லை. முதன்மை கல்வி அதிகாரிகள் அரசு பள்ளிகளுக்கு வழங்கிவிட்டனர். இம்முறையாவது மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை அப்படியே பள்ளிகளுக்கு தரவேண்டும். இதனால் தலைமை ஆசிரியர்களுக்கு நிதிச்சுமை குறையும்,'' என்றார்.கள்ளர் பள்ளிகள்: அரசு கள்ளர் பள்ளிகளுக்கும் கடந்த மூன்றாண்டாக மாணவர்களுக்கான சிறப்பு கட்டணம் வழங்கப்படவில்லை. அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் பலமுறை அமைச்சர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் பலனில்லை. இவ்வகையில் ரூ. பல லட்சம் ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்க வேண்டியுள்ளது. மாநகராட்சி பள்ளிக்கு வந்ததுபோன்ற சுற்றறிக்கைகூட இங்கு வரவில்லை. இதனால் 4வது ஆண்டும் ஏமாற்றப்படுவோமோ என மாணவர்கள், ஆசிரியர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.