உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாவட்டத்தில் சாயப் பட்டறைக்கு அனுமதி இல்லை கலெக்டர் தகவல்

மதுரை மாவட்டத்தில் சாயப் பட்டறைக்கு அனுமதி இல்லை கலெக்டர் தகவல்

மதுரை : ''மதுரை மாவட்டத்தில் சாயப் பட்டறைக்கு அனுமதி இல்லை,'' என கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.மதுரையில் விவசாய குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் சகாயம் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., முருகேஷ், விவசாய இணை இயக்குனர் சங்கரலிங்கம், நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை பங்கேற்றனர். கலெக்டர் பேசுகையில், ''விவசாயிகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் தரவேண்டும். தற்போது அதிகளவு பட்டா மாறுதல் மனுக்கள் வருகின்றன. எனவே ஒவ்வொரு விவசாய கூட்டத்திலும் 200 பேருக்கு பட்டா மாறுதல் வழங்க ஏற்பாடு செய்ய உள்ளேன்,'' என்றார்.விவசாயி: வடபழஞ்சி பகுதி கண்மாய், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதை அகற்ற வேண்டும்.பொதுப்பணித் துறை அதிகாரி: ஆக்கிரமிப்பு பகுதிகளில் 56 வீடுகள் உள்ளன. மொத்தமுள்ள 90 ஆக்கிரமிப்புகளில் மற்றவை அகற்றப்பட்டுவிட்டன. மின்இணைப்பு போன்றவை உள்ள வீடுகளை அகற்ற முடியவில்லை. கலெக்டர்: அங்கு குடியிருப்போருக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு தருவோம். எனவே அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயி: மதுரை மாவட்டம் முழுவதுமே ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை எடுத்தாக வேண்டும்.கலெக்டர்: ஏரி, கண்மாய்கள்தான் நீராதாரங்கள். அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்போது அதிகாரிகள் பாரபட்சம் காட்டக் கூடாது. முன்பு இருந்த கண்மாய்களில் மாவட்ட வருவாய் அதிகாரிகளே பட்டா போட்டு கொடுத்துள்ளனர். அதுபோன்றவற்றையும் அகற்ற வேண்டும். விவசாயி: விவசாய பாசன வசதிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கலெக்டர்: புதிய நிரந்தர பாசன வசதி ஏற்படுத்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.விவசாயி: உரக்கடைகளில் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் எழுதி வைக்கப்படுவதில்லை.கலெக்டர்: அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம்.விவசாயி: உசிலம்பட்டி, பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.கலெக்டர்: மதுரை மாவட்டத்தில் சாயப் பட்டறை நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து சுற்றுச் சூழல் அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயி: உழவர் சந்தைகள் அனைத்தும் வியாபாரிகள் சந்தையாக மாறி வருகின்றன.கலெக்டர்: உங்கள் விருப்பப்படி உழவர் சந்தையை நாளை இல்லை, இன்றே மாற்றிவிடுவோம். ஆனால் நீங்களே (விவசாயிகள்) அங்கு தினமும் வந்து உட்கார்ந்து வியாபாரம் செய்ய வேண்டும்.விவசாயிகள்: எங்களால் அங்கு வியாபாரம் செய்ய இயலாது.கலெக்டர்: அப்படியானால் அதுபற்றி நீங்கள் பேசக் கூடாது. உங்களால் முடியும் என்றால் நாங்கள் அதுபற்றி உடனே நடவடிக்கை எடுக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை