| ADDED : ஏப் 08, 2024 04:07 AM
மதுரை : கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் அலுவலக உதவியாளராக வேலை செய்வதால் பணியிட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மதுரை தல்லாகுளம் மண்டல கால்நடை அலுவலக வளாகத்தில் இணை இயக்குநர், துணை, உதவி இயக்குநர் மற்றும் பாலி கிளினிக் மருத்துவமனையிலும் திருமங்கலம் உதவி இயக்குநர் அலுவலகத்திலும் அலுவலக உதவியாளர்களுக்கு பதிலாக பராமரிப்பு உதவியாளர்கள் தான் உள்ளனர். அலுவலக உதவியாளர்களுக்கான பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதை அரசுக்கு தெரிவித்து அதற்கான ஆட்களை நியமனம் செய்திருக்க வேண்டும். சில நேரங்களில் ஜூனியர் உதவியாளர்கள் இல்லாத போது கருவூல வேலை, பில் அடிப்பது போன்ற வேலைகளையும் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது.கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கூறியதாவது: கால்நடை மருந்தகத்தில் டாக்டருக்கு உதவியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது தான் எங்கள் வேலை. இரு மருந்தகங்களுக்கு வாரத்தில் தலா 3 நாட்கள் என மாறி மாறி வேலை செய்கிறோம். 2015 கணக்கெடுப்பின் படி மதுரை மாவட்டத்தில் 47 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2019, 2021, 2023 என தொடர்ந்து நேர்காணல் நடத்தும் போது பாதியில் பிரச்னை ஏற்பட்டு கைவிடப்படுகிறது.கடந்த டிசம்பரில் மீதியுள்ளோரை வரவழைத்து நேர்காணல் நடத்தியிருக்க வேண்டும். 2015 க்கு பிறகு 7 கிளை மருந்தகங்கள் மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வேலை செய்வதற்கு பராமரிப்பு உதவியாளர்கள் இல்லாமல் சிரமப்படுகிறோம். தற்போதும் தேர்தலை காரணம் காட்டி தள்ளி வைத்துள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் தாமதமின்றி நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.