உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போடியில் இருந்து கூடுதல் ரயில் தேவை பயணிகள் வலியுறுத்தல்

போடியில் இருந்து கூடுதல் ரயில் தேவை பயணிகள் வலியுறுத்தல்

உசிலம்பட்டி, மதுரையில் இருந்து காலையில் போடி செல்லும் நேரத்தில், போடியில் இருந்தும் மதுரைக்கு பாஸஞ்சர் ரயில் சேவையை துவக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை போடிநாயக்கனுார் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. தற்போது இந்தப்பாதையில் தேனி வரை மின்வழிப்பாதையாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. தொடர்ந்து போடி வரை பணிகள் நடந்து வருகிறது. தற்போது மதுரையில் இருந்து ஒரு பாஸஞ்சர் ரயில் காலை 8:20 மணிக்கு புறப்பட்டு போடிநாயக்கனுார் செல்கிறது. மாலையில் போடியில் இருந்து 5:50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் போடியில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களால் மதுரையில் இருந்து போடி செல்வோருக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, போடியில் இருந்தும் மதுரை செல்வோருக்கு வசதியாக காலை 8:00 மணிக்கு ஒரு பாஸஞ்சர் ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முன்னாள் லயன்ஸ் கவர்னர் அறிவழகன் கூறியதாவது: மீட்டர்கேஜ் பாதையாக இருந்த போது மதுரையில் இருந்து போடி இடையே இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டது. வேகம் குறைவான காரணத்தால் படிப்படியாக ஒரு நாளைக்கு ஒரு முறை என மாறி, வேலை நாட்கள் மட்டும் ரயில் இயங்கியது. தற்போது அகல பாதையாக மாற்றப்பட்ட நிலையில் மதுரையில் புறப்படும் நேரத்தில் போடியில் இருந்தும் மதுரைக்கு ரயில் இயக்கப்பட வேண்டும். இதனால் தேனி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்வோருக்கு வசதியாக இருக்கும். மதுரை மட்டுமின்றி பிறநகரங்களுக்கும் போடியில் இருந்து ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை