உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விருதுநகரில் காங். மாணிக்கம் தாகூர் முன்னிலை தே.மு.தி.க., விஜயபிரபாகரனுடன் கடும் போட்டி: ராதிகாவுக்கு மூன்றாமிடம்

விருதுநகரில் காங். மாணிக்கம் தாகூர் முன்னிலை தே.மு.தி.க., விஜயபிரபாகரனுடன் கடும் போட்டி: ராதிகாவுக்கு மூன்றாமிடம்

விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட்ட காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நேற்று இரவு 12:00 மணி வரை நடந்த ஓட்டு எண்ணிக்கையில் 3,82, 876 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்தார். இவருக்கு அடுத்தபடியாக வந்த தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் கடும் போட்டியை ஏற்படுத்தினார்.இத்தொகுதியில் பா.ஜ., சார்பில் ராதிகா, காங். சார்பில் மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் ஆகியோர் உட்பட 28 பேர் போட்டியிட்டனர்.சாத்துார் தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி சேராததால் கால் மணி நேர தாமதத்திற்கு பிறகு ஓட்டு எண்ணும் பணி துவங்கியது.பதிவான ஓட்டுகள் 24 சுற்றுகளில் எண்ணி இரவு 8:15 மணிக்கு முடிக்கப்பட்டது. இதில் முதல் 7 சுற்றுகள் வரை தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தார். 7வது சுற்று வரை 1419 ஓட்டுக்கள் முன்னிலைப் பெற்ற தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனை, 8வது சுற்றில் 348 ஓட்டுக்கள் அதிகம் பெற்று காங். மாணிக்கம் தாகூர் முந்தினார். 9வது சுற்றில் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்ற நிலையில், 10வது சுற்றில் 194 ஓட்டுகள் அதிகம் பெற்று விஜய பிரபாகரன் முன்னிலை பெற்றார். 11வது சுற்று முதல் காங். மாணிக்கம் தாகூர் ஏறுமுகமாகவே முன்னிலை பெற்று வந்தார். இருப்பினும் 20வது சுற்று வரை 5548 ஓட்டுக்கள் தான் முன்னிலை பெற முடிந்தது. பெரிய ஓட்டு வித்தியாசத்தை பெற முடியவில்லை.இதில் 24 சுற்றுகள் முடிவில்காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3 ,82 ,876 ஓட்டுக்கள் பெற்று, தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் பெற்ற 3,78,243 ஓட்டுகளை விட அதிகமாக 4633ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். ராதிகா 1,64,149ஓட்டுக்கள் பெற்று 3வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கவுசிக் 76,122 ஓட்டுக்கள் பெற்றார்.காலையில் இருந்து விஜய பிரபாகரன் முன்னிலை பெற்றதால் கொண்டாடுவதற்காக வெளியூர் தே.மு.தி.க.,வினர் நிறைய குவிந்திருந்தனர். இந்நிலையில் இறுதி சுற்று வரை சென்று பின்னடைவை சந்தித்ததால் தே.மு.தி.க.,வினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.2019 லோக்சபா தேர்தலில் மாணிக்கம் தாகூர் 4 லட்சத்து 70 ஆயிரத்து 883 ஓட்டுக்கள் பெற்றிருந்தார்.தே.மு.தி.க., அழகர்சாமி 3 லட்சத்து 16 ஆயிரத்து 329 ஓட்டுக்கள் பெற்றிருந்தார்.தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில்10 ஆயிரத்து 212 பதிவான நிலையில் 1077செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு இரவு 12:00 மணி கடந்தும்எண்ணப்பட்டன. இதனால் முடிவுகள் அறிவிக்கப்படுவது தாமதம் ஆனது.

தபால் ஓட்டுக்களால் தாமதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை