உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை கோட்டத்தில் ரயில் பெட்டி படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் ரயில்வே அதிர்ச்சி ரிப்போர்ட்

மதுரை கோட்டத்தில் ரயில் பெட்டி படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் ரயில்வே அதிர்ச்சி ரிப்போர்ட்

மதுரை : மதுரை கோட்டத்தில் ரயில் பெட்டி படிக்கட்டுகளில் பயணம் செய்து உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூனில் மட்டும் படிக்கட்டுகளில் பயணம் செய்த பயணிகளில் 8 பேர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் படிக்கட்டில் பயணம் செய்த 23 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் காயம் அடைந்தனர். கடந்த ஆண்டு பலி எண்ணிக்கை 41 ஆகவும், காயம் அடைந்தோர் எண்ணிக்கை 43 ஆகவும் உள்ளது.'படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம்' என ரயில்வே ஸ்டேஷன்களில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனாலும் பயணிகள் படிக்கட்டுகளில் நின்றும் அமர்ந்தும் பயணம் செய்வது தொடர்கிறது. இத்தகைய விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான நேரங்களில் நடக்கிறது. படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகள் துாக்க கலக்கத்தில் கீழே விழுவது அதிகரித்து வருகிறது. படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வோரின் கால்கள் ஸ்டேஷன் நடைமேடைகளில் மோதியும் விபத்துகள் ஏற்படுகின்றன.படிக்கட்டு பயணத்தால் அதிகபட்சமாக விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி இடையே 66 பேரும், மதுரை - திண்டுக்கல் இடையே 44 பேரும், விருதுநகர் செங்கோட்டை இடையே 43 பேரும் பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலும் 25 வயதிற்கு உட்பட்டவர்களே இவ்விபத்தில் சிக்குகின்றனர். பாதிப்படைந்தவர்களில் 87 சதவீதம் ஆண்கள் 13 சதவீதம் பெண்கள்.படிக்கட்டு பயணத்தைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு படிக்கட்டில் பயணம் செய்த 22 பேர் மீது வழக்கு பதியப்பட்டு ரூ.10 ஆயிரத்து நுாறு அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் வரை 50 பேர் மீது வழக்கு பதியப்பட்டு ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், ''ரயில் பாதையில் உள்ள மின்சார கம்பங்களில் துாரம் கணக்கிடும் வகையில் எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். எ.கா., சென்னைக்கும் மதுரைக்கும் இடையே 493 கி.மீ., என்று குறிப்பிடும் வகையில் சோழவந்தானுக்கு பிறகு ஒவ்வொரு நுாறு மீட்டருக்கும் 471/000, 471/100, 471/200... என தொடர்ச்சியாக எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.தவறுதலாக யாராவது ரயிலில் இருந்து விழுந்து விட்டால் அதன் அருகில் உள்ள மின்சார கம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் எண்ணை குறிப்பிட்டு 'ரயில் மதாத்' செயலியில் புகார் செய்தால் பாதிக்கப்பட்டவரை விரைவில் மீட்டு காப்பாற்ற முடியும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை