உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கருணைப் பணி விண்ணப்பம் தாமதம்; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கருணைப் பணி விண்ணப்பம் தாமதம்; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : கருணைப் பணி நியமனத்திற்கு நீண்ட கால தாமதத்திற்குப் பின் விண்ணப்பிக்க முடியாது. மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்காததால் பணி கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். பணியில் இருந்தபோது 2016 ஜன.,4ல் இறந்தார். இவரது மகன் சுக சோலைராஜா. தந்தை மரணத்தின்போது இவர் மைனர். கருணைப் பணி நியமனம் கோரி 2018 ல் கலெக்டரிடம் விண்ணப்பித்தார். தந்தை இறந்த தேதியில் உரிய வயதை பூர்த்தி செய்யவில்லை என கலெக்டர் 2019 பிப்.,18 ல் நிராகரித்தார். வயது பூர்த்தியானபின் 2019 செப்.,28 ல் சுக சோலைராஜா விண்ணப்பித்தார். தந்தை இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கவில்லை என 2020 ல் கலெக்டர் நிராகரித்தார். இதை எதிர்த்து சுக சோலைராஜா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.தனிநீதிபதி, 'தந்தை இறந்த 3 ஆண்டுகளுக்குப் பின் விண்ணப்பித்துள்ளார். பணி நியமனத்தை உரிமையாக மனுதாரர் கோர முடியாது. ஏற்கனவே 5 ஆண்டுகள் காலாவதியாகிவிட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து சுக சோலைராஜா மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: பணியின்போது இறந்தவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு கருணைப் பணி வழங்குகிறது. கருணைப் பணி நியமனம் உரிமையல்ல. இத்திட்டத்தின் கீழ் நீண்ட கால தாமதத்திற்குப் பின் விண்ணப்பிக்க முடியாது. உரிய காலத்திற்குள் மனுதாரர் விண்ணப்பிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிடத் தேவையில்லை. மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை