| ADDED : ஜூன் 08, 2024 06:29 AM
மேலுார் : மதுரை மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டு ரூ.10 ஆயிரம் 'அட்வான்ஸ்' பெற்ற மின் இளநிலை பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர்.மதுரை மாவட்டம் மேலுார் அருகேயுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேஷ் 27. சேக்கிப்பட்டியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு மேலுார் மேற்கு மின் வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் ஒசானம் ஜோனியிடம் 45, விண்ணப்பித்தார். அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்கவே ராஜேஷ் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.நேற்று மாலை 'அட்வான்ஸ்' தொகையாக ரூ.10 ஆயிரத்தை ராஜேஷ் கொடுக்க, அதை வாங்காத ஒசானம் ஜோனி, வணிக ஆய்வாளர் பாண்டியராஜனிடம் 35, வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். அவர் பணத்தை வாங்கியபோது டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சூரியகலா, குமரகுரு கைது செய்தனர்.