| ADDED : ஆக 18, 2024 05:34 AM
மதுரை : நான்குவழிச் சாலைக்காக நிலத்தை இழந்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, இழப்பீடு நிர்ணயிக்க கலெக்டருக்கு பதிலாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை சமரச நடுவராக நியமிப்பது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரைத்தது.மதுரை மாவட்டம் இலந்தைக்குளத்தில் சுரேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதை மதுரை - -திருச்சி நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்த மத்திய அரசு 2004 அறிவிப்பு வெளியிட்டது.உரிய இழப்பீடு கோரி மதுரை டி.ஆர்.ஓ.,விற்கு சுரேந்திரன் விண்ணப்பித்தார். ரூ.84 ஆயிரத்து 47 இழப்பீடு வழங்க டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார். கூடுதல் இழப்பீடு கோரி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) சட்டப்படி சமரச நடுவரான (மத்தியஸ்தர்) மதுரை கலெக்டரிடம் சுரேந்திரன் விண்ணப்பித்தார். கலெக்டர் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சுரேந்திரன் மேல்முறையீடு செய்தார்.அந்நீதிமன்றம் ரூ.27 லட்சத்து 3 ஆயிரத்து 558 வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து என்.எச்.ஏ.ஐ., திருச்சி திட்ட இயக்குனர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் வி.பவானி சுப்பராயன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு: கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீட்டை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும் என நிலத்தை இழந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.சட்டப்படி அமைக்கப்பட்ட சமரச நடுவரின் நடவடிக்கைகளில் உண்மைத் தன்மை இல்லாதபோது கீழமை நீதிமன்றம் அதிகார வரம்பை பயன்படுத்தி, நிலத்தை இழந்தவரின் நலன் கருதி இழப்பீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும். அதில் அந்நீதிமன்றம் தலையிட்டு சரியாக இழப்பீடு நிர்ணயித்துள்ளது. இழப்பீடு கோருபவர் போதிய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். நிலத்தின் சந்தை மதிப்பை நிர்ணயிக்க உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை சமரச நடுவர் பரிசீலிக்கவில்லை.என்.எச்.ஏ.ஐ., டோல்கேட்டுகளில் காருக்கு ரூ.150, லாரிக்கு ரூ.2250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 கிலோ அரிசியின் விலை ரூ.700 க்கு அதிகமாக இருக்கிறது. அருகிலுள்ள நிலத்தின் சந்தை மதிப்பு ஒரு சென்ட்டிற்கு ரூ.29 ஆயிரத்து 212. இதை கருத்தில் கொள்ளாமல் கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு சென்டிற்கு ரூ.695 அல்லது சதுர மீட்டருக்கு ரூ.17.17 என சமரச நடுவர் நிர்ணயம் செய்துள்ளார். இது நீதிமன்றத்தின் நீதித்துறை மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சுரேந்திரன் 9 சதவீத வட்டியுடன் ரூ.27 லட்சத்து 94 ஆயிரத்து 12 இழப்பீடு பெற உரிமையுண்டு.இழப்பீட்டை தீர்மானிக்கும் சமரச நடுவர் கலெக்டர். அவருக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கிறார். மாவட்டத்தின் வருவாய்த்துறைக்கும் தலைமை வகிக்கிறார்.அமைச்சர்கள் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால், அதை முதலில் கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும். அவர் அதை கவனிக்க வேண்டும். கடினமான பணிச்சுமையால் நடைமுறையை பின்பற்றி சரியாக கலெக்டர் இழப்பீடு நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது. நிலத்தை இழந்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, இழப்பீடு நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை சமரச நடுவராக நியமிப்பது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என இந்நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தர விட்டனர்.