உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளந்திரியில் வைகை நீர்ப்பாசன பகுதிகளில் புதிய பகுதிகளை அடையாளம் காணுங்க...

கள்ளந்திரியில் வைகை நீர்ப்பாசன பகுதிகளில் புதிய பகுதிகளை அடையாளம் காணுங்க...

மதுரை: கள்ளந்திரி பகுதியில் வைகை நீர்ப்பாசன இருபோக சாகுபடியை கூட்டி கழித்து புதிய பாசன பகுதிகளை அடையாளம் காணவேண்டும் என ஒருபோக சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.மதுரை மாவட்டத்தின் மொத்த சாகுபடி 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர். மேலுார் கால்வாய் மூலம் 95 ஆயிரம் ஏக்கர், திருமங்கலம் கால்வாய் மூலம் 19 ஆயிரத்து 500 ஏக்கர் மற்றும் கண்மாய் பாசனம் மூலம் ஒருபோக சாகுபடியும் கள்ளந்திரியில் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக சாகுபடியும் நடக்கிறது.இருபோக சாகுபடி பரப்பு குறைந்து வருவதாக தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அழகுசேர்வை கூறியதாவது: நிலையூர், பனையூர், கல்லம்பல், விராதனுார், திருப்பரங்குன்றம், வட, தென்பழஞ்சி பகுதிகளில் ஒருபோக சாகுபடி செய்யப்படுகிறது. வட, தென் பழஞ்சியில் புஞ்சை நிலம் குறைந்து நஞ்சை சாகுபடியும் கூத்தியார் குண்டு, நிலையூர், விளாச்சேரி வரை பாசனப்பரப்பு அதிகரித்துள்ளது. வைகை இருபோக பாசனப்பரப்பை மறுசீராய்வு செய்து வாய்க்காலை சீரமைத்தால் எங்கள் பகுதிகளும் இருபோக சாகுபடி பரப்பாக மாறிவிடும்.வைகை நீர்ப்பாசன பகுதி வாய்க்கால்களை மறுசீரமைப்பு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கடந்தாண்டு செப்டம்பரில் கோரிக்கை வைத்தோம். இந்தாண்டு சென்னையில் நீர்வளத்துறை அதிகாரியை சந்தித்து கோரிக்கையை தெரிவித்தோம். இன்னும்நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

வீணாகும் தண்ணீர்

அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவ தலைவர் ராமன் கூறியதாவது:கள்ளந்திரி பாசனத்தில்ஆனையூர், மதுரை கிழக்கு, அய்யர்பங்களா, பாண்டிகோயில் வரை நகர்ப்புற கட்டமைப்பால் வீடுகளும் மனைகளும் நிறைய உருவாகிவிட்டது.இதனால் பெருமழை பெய்யும் போது வாய்க்கால் வழி தண்ணீர் செல்ல முடியாமல் புதுார் சூர்யாநகர், நாராயணபுரம் பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குகிறது. இப்படி வீணாகும் தண்ணீரை முறைப்படுத்த வேண்டும். திருமங்கலம் கால்வாய் பகுதி பாசனத்தில் விக்கிரமங்கலம், கீழப்பட்டி, முதலைக்குளம், கண்ணனுார் பகுதிகளில் 200 முதல் 300 ஏக்கர் வரை பாசனம் அதிகரித்துள்ளது. கள்ளந்திரியில் பாசனம் குறைந்தாலும் ஒருபோக பகுதிகளில் பாசனம் அதிகரித்து அதே 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பாசனமே நடக்கிறது. அரசும் இதற்கான திட்டங்களையும் மானியங்களையும் அறிவிக்கிறது. எனவே நீர்வளத்துறையும் மாவட்ட நிர்வாகமும்பாசன நீரை முறைப்படுத்துவது குறித்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை