உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் மீண்டும் மா.கம்யூ., சு.வெங்கடேசன் வெற்றி பா.ஜ., 2.20 லட்சம் ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம்

மதுரையில் மீண்டும் மா.கம்யூ., சு.வெங்கடேசன் வெற்றி பா.ஜ., 2.20 லட்சம் ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம்

மதுரை, : லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் இரண்டாவது முறையாக தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன் 2,09,409 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.இவர் 2019 தேர்தலில் 1,39,396 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணனை பின்னுக்கு தள்ளி பா.ஜ., வேட்பாளர் ராம சீனிவாசன் 2.20 லட்சம் ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.இத்தேர்தலில் மதுரை தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். கடந்த 2019 தேர்தலில் 4,47,075 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இம்முறை 2122 தபால் ஓட்டுகளும், 4,28,201 ஓட்டுகளும் பெற்று 2,09,409 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரண்டாம் இடத்தில் பா.ஜ.,

காலை 8:00 மணி முதலே வெங்கடேசன் முன்னிலையில் இருந்தார்.இரண்டாம் இடத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வருவார் என எதிர்பார்த்த நிலையில் காலை 11:00 மணிக்கு மேல் பா.ஜ., வேட்பாளர் ராம சீனிவாசன் இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறினார். மொத்தம்25 சுற்றுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் மா.கம்யூ., 24,373, அ.தி.மு.க., 14,891, பா.ஜ., 8,644, நாம் தமிழர் சத்யாதேவி 6186 ஓட்டுகள் பெற்றன. முதல் சுற்றிலேயே வெங்கடேசன் 9,473 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார். 3 சுற்றுகள் வரை அ.தி.மு.க., இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், 4,5,6 சுற்றுகளில் பா.ஜ., தொடர்ந்து 2ம் இடத்திற்கு முன்னேறியது. இந்த சுற்றுகளில் சரவணனைவிட ராம சீனிவாசன் கூடுதலாக 6006 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டார். பத்தாவது சுற்றில் 13,783 ஓட்டுகள் கூடுதலாக அ.தி.மு.க.,வை விட பா.ஜ., பெற்றிருந்தது.

1247 ஓட்டுகள் நிராகரிப்பு

25வது இறுதி சுற்றில் வெங்கடேசன் 4,30,323 (தபால் ஓட்டு 2122), ராமசீனிவாசன் 2,20,914 (1879), சரவணன் 2,04,804 (641), சத்யாதேவி 92,386(493) ஓட்டுகள் பெற்றனர். சுயேச்சைகள் உட்பட மற்ற 17 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இவர்களை காட்டிலும் நோட்டாவுக்கு 11,174 (தபால் ஓட்டு 100) ஓட்டுகள் கிடைத்தன. பல்வேறு காரணங்களால் 1247 தபால் ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கலெக்டர் சங்கீதா அறிவித்தார்.

அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏன்

அ.தி.மு.க., வேட்பாளர்சரவணனை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு நகர் செயலாளர்செல்லுார் ராஜூவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அவரும், கட்சியினரும் தீவிரமாக பிரசாரம் செய்தனர். கூட்டணியில் இருந்து பா.ஜ.,வை கழற்றிவிட்டு அ.தி.மு.க., போட்டியிட்டது. இத்தொகுதியில் அ.தி.மு.க., -பா.ஜ., பெற்ற ஓட்டுக்களை சேர்த்தாலும் அதை விட அதிகமாகவே சு.வெங்கடேசன் பெற்றுஉள்ளார்.கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் தி.மு.க., கூட்டணியை தோல்வி அடைய செய்திருக்க முடியும் என்பதையே பா.ஜ., பெற்ற ஓட்டுகள் காட்டுகின்றன. தவிர அ.தி.மு.க.,வில் உட்கட்சி குழப்பம், ஓ.பன்னீர்செல்வம், தினகரன் பிரிந்து சென்று ஓட்டுகளை பிரித்தது அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம். அதேசமயம் தமிழக அளவில் ஓட்டு சதவீதம் 20லிருந்து 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு கூட்டணி பலமே வெற்றி பெற காரணமாக அமைந்தது. அதேபோல் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு கூட்டணிபலம் அமைந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். இதுகுறித்து பொதுச்செயலாளர்பழனிசாமி கவனத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை