| ADDED : ஏப் 22, 2024 05:25 AM
அழகர்கோவில், : ''சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் பலஆண்டுகளுக்குமுன் ஆயிரம் பொன் சப்பரத்திலேயே வைகை ஆற்றில் இறங்கியுள்ளார். காலப் போக்கில் தங்கக் குதிரையில் மட்டுமே இறங்குகிறார்'' என தலைமை பட்டாச்சியார் நம்பி தெரிவிக்கிறார்.அவர் கூறியதாவது: மதுரையை சுற்றியுள்ள பகுதி மக்களின் குலதெய்வமாக கள்ளழகர் இருந்துள்ளார். சித்திரைத் திருவிழாவின் போது உறவினர்களுடன் கலந்து கொள்ளும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது இன்று வரை நடைமுறையில் உள்ளது.இதற்காக பக்தர்கள் பலநாட்கள் விரதம் இருந்து, கள்ளழகர் வேடம் அணிந்து சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மதுரை வருவது வழக்கம். வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் என்ன நிறத்தில் பட்டு உடுத்தி வருகிறார் என்பதை பொறுத்தே தங்கள் வாழ்வும் சிறக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். விவசாயம் செழிக்கவும், தொழில் விருத்திக்காகவும், குடும்ப நலனுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்வர்.பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும். வெண்பட்டு எனில் மழை கொட்டும். சிகப்பு நிறம் தீமை தரும் என கருதுவதுண்டு. வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் 70 முதல் 80 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம்பொன் சப்பரத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளியுள்ளார். மக்கள் பெருக்கத்தாலும், ரோடுகள் வசதிக்காகவும் இந்த நடைமுறை மாறி விட்டது. அதற்கு பிறகு ஆயிரம் பொன் சப்பரம் தல்லாகுளத்தில் நிறுத்தப்பட்டு, தங்கக் குதிரை வாகனத்தில் சென்று வைகையில் இறங்குகிறார், என்றார்.