உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தோற்பாவை கூத்து... தோள் கொடுக்கிறார் முத்து ஒற்றை கலைஞனாய் போராடும் லட்சுமணராவ்

தோற்பாவை கூத்து... தோள் கொடுக்கிறார் முத்து ஒற்றை கலைஞனாய் போராடும் லட்சுமணராவ்

மதுரை : 'அழிந்து வரும் கலையில் ஒன்று தோற்பாவை கூத்து. தமிழகத்தில் மிகச்சிலரே இக்கலையை வாழவைக்கிறோம். அரசு வாய்ப்பு தந்து எங்களை வாழவைக்க வேண்டும்' என்கிறார் மதுரையைச் சேர்ந்த கலைமாமணி விருதுபெற்ற முத்து லட்சுமணராவ், 67.மேடையின் பின்புறம் அமர்ந்து பொம்மைகளை அசைத்து, நாடகம் போல வண்ணக் காட்சிகளாய் திரையில் தெரியும் தோற்பாவை கூத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெரியோரும் ரசிப்பார். மதுரை திருமலை நாயக்கர் மகாலில் சுற்றுலாத்துறை நடத்திய கலைவிழாவில் நிகழ்ச்சியை நடத்தினார் முத்துலட்சுமணராவ்.அவர் கூறியதாவது:கதை, வசனம், பாட்டு, திரைக்கதை தொடங்கி ஆண், பெண் குரல்கள், விலங்குகளின் ஒலிகளை எழுப்புவதோடு திரையின் பின்னால் பொம்மைகளை கையால் இயக்குவது வரை ஒருவரே செய்வது இந்தக் கலையில் மட்டுமே சாத்தியம். தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட நாங்கள், திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து தோற்பாவை கூத்து நடத்துகிறோம்.கிருஷ்ணாராவ்தான் எங்கள் முன்னோடி. அவருக்குப்பின் 5 வது தலைமுறையாக நடத்துகிறேன். அக்காலத்தில் புராணக்கதைகள், இதிகாச நாடகங்களை நடத்தியபோது மக்கள் வரவேற்றனர். பசியின்றி கஞ்சி குடித்தோம்.இப்போது வாய்ப்பு தேடி, அரசு விழாவை எதிர்பார்த்து வாழ்கிறோம். இரண்டாண்டுகளாக அரசு நிகழ்ச்சியும் கிடைக்கவில்லை. காலத்திற்கேற்ப பள்ளி, கல்லுாரிகளில் பெற்றோர், ஆசிரியர்களை மதிப்பது, நாட்டு நடப்பு, வனவிலங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறோம்.தோற்பாவைக்காக ஆட்டுத்தோலை கண்ணாடி போல பதப்படுத்தி, அதில் உருவங்கள் வரைந்து வண்ணம் தீட்டுவோம். ராவணன், கும்பகர்ணன் போன்ற பெரிய படங்களுக்கு முழுத்தோலும் சரியாக இருக்கும். ராமர், லட்சுமணன் என்றால் இரண்டு படம் வரையலாம். இந்த உருவ பொம்மையுடன் மூங்கில் குச்சியை நுாலில் கட்டி விட்டால் தோற்பாவை தயாராகி விடும்.ஒரு நபரே பாட்டு பாடி வசனம் பேசுவோம். கதை, காட்சிக்கேற்ப உருவங்களை மாற்றிக் கொண்டே இருப்போம். விலங்குகள் என்றால் அவற்றுக்கேற்ப குரலை 'மிமிக்ரி' செய்வோம். பெண் குரலிலும் பேசுவோம். எனது 4 மகன்கள், அவர்களின் வாரிசுகள் இதில் ஈடுபட்டுள்ளனர். வாய்ப்பு கிடைக்காத போது மகன்கள் வேறு வேலைக்கு செல்வர்.

அரசு உதவி வேண்டும்

இதுபோன்ற கிராமியக் கலைகள் அழிந்தால் நாளைய தலைமுறைக்கு இதுபற்றி தெரியாமல் போய்விடும். சுற்றுச்சூழல், வனத்துறை, சுற்றுலா குறித்த விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்த இக்கலையை பயன்படுத்தலாம். அதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கினால் இக்கலை அழியாது. விருது கலைஞர்களுக்கு அரசு வீடுகட்டி தரவேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளும் வாய்ப்பு தரவேண்டும் என்றார். இவரிடம் பேச: 99440 67083


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை