| ADDED : மே 28, 2024 03:35 AM
மதுரை : கல்வித்துறையில் 'எமிஸ்'ல் பதிவாகிய மாணவர்களின் அலைபேசி எண்களை சரிபார்க்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து வெளியேறிய மாணவர்களின் எண்களையும் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வேர்டு) கேட்டு உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புலம்புகின்றனர்.'எமிஸ்' தளத்தில் 1.16 கோடி மாணவர்களின் அலைபேசி எண்கள் உள்ளன. இந்த எண்களை சரிபார்க்கும் பணியில் ஆசிரியர்கள் 10 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக மாணவர்களின் அலைபேசிக்கு செல்லும் ஓ.டி.பி.,யை கேட்டு அதை எமிஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பல பெற்றோர் ஓ.டி.பி., எண்களை தெரிவிக்க முடியாது என மறுப்பு தெரிவிப்பதற்கிடையே இப்பணியை ஆசிரியர்கள் நிறைவேற்றுவது சவாலாக உள்ளது.இந்நிலையில் இந்தாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு முடித்து பிற பள்ளிகளில் பிளஸ் 1 சேரும் மாணவர்களின் ஓ.டி.பி., எண்களை பெற்று உறுதி செய்ய வேண்டும் என மாவட்டம் வாரியாக ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கோடை விடுமுறையை தியாகம் செய்து இப்பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர். 'விடுமுறை முடிந்த பின் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே என்பதை மனதில் வைத்து' ஓ.டி.பி.,யை ஆசிரியருக்கு பெற்றோர் தருகின்றனர். ஆனால் பத்தாம் வகுப்பு முடித்து வேறு பள்ளி அல்லது பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி பயில செல்லும் மாணவர்கள், பிளஸ் 2 முடித்து கல்லுாரி செல்லும் மாணவர்கள் 'எங்கள் எண்கள் ஏன் தரவேண்டும்' என எதிர்கேள்வி கேட்கின்றனர். பள்ளிகள் திறந்த பின் அலைபேசி எண்களை எளிதில் உறுதி செய்ய முடியும். ஆனால் ஆசிரியருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி தேவையில்லாத பணிகளை அதிகாரிகள் கட்டாயமாக திணித்து மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றனர் என்றனர்.