| ADDED : மார் 25, 2024 06:13 AM
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பங்குனி உத்திர விழா, ஏடு கொடுக்கும் விழா நடந்தது.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு ஜெபக்குட அபிஷேகம் முடிந்து பச்சைக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா சென்றனர். மதுரை பகுதிகளிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். ஏடு கொடுக்கும் விழா
பங்குனி 8ம் நாள் திருவிழாவாக நேற்று காலை சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் பெருமான் ஏடு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக புறப்பாடாகி வீதிஉலா நிகழ்ச்சி முடிந்து கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். தீபாராதனைகள் முடிந்து நடராஜர் கரத்தில்இருந்த ஏடுகளை சிவாச்சாரியார்கள் பெற்று சிவகாமி அம்பாளிடம் சேர்ப்பித்தனர். இரவு பச்சை குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மூலவர் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை முடிந்து, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்தது.