| ADDED : ஆக 17, 2024 02:03 AM
மதுரை: 'மூன்றுமாவடி பகுதியில் உள்ள பெரியாறு பாசன கால்வாயை துார்வார வேண்டும்' என, பா.ஜ.,மாநில ஊடகப்பிரிவு செயலாளர் நாகராஜன் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளார்.அவரது மனு: தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீர், தென்மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு திறக்கப் படுகிறது. பெரியாறு பாசன கால்வாய் வழியாக வரும் நீர், மதுரை நகர், புறநகர் பகுதிகளில் குறிப்பாக நாராயணபுரம், நாகனாகுளம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி ஊருணிகளில் நீர்வரத்து சேர்க்கிறது.மதுரை அய்யர்பங்களாவில் இருந்து மூன்றுமாவடிவழியாக சம்பக்குளம் செல்லும் வழியில் உள்ள பெரியாறு கால்வாயை பொதுப்பணித் துறையினர் முறையாக துார்வாரவில்லை. செடி, கொடிகள்முளைத்து நீர்வழித்தடங்கள் தடைபட்டுள்ளன. குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளன.இதனால் மழைக்காலத்தில் அடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்புக்குள் நீர்புகுந்துவிடுகிறது. பேங்க் காலனி, எழில்நகர், ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், பரசுராம்பட்டி பகுதியில் வெள்ள அபாயம் உள்ளது. எனவே பருவமழைக் காலம் துவங்கும் முன் இந்த பெரியாறு பாசன கால்வாயை துார்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.